

சுரண்டை,
சுரண்டை அருகே உள்ள அச்சங்குட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவர், ஊருக்கு தென்புறம் உள்ள அவரது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்க்கும் தொழிலும் செய்து வருகிறார். கொட்டகையை சுற்றிலும் கம்பி வேலியும், அதன் உட்புறமாக தென்னை மட்டைகளை கொண்டு வேலியும் அமைத்து ஆடுகளை பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.
இருப்பினும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவரது கொட்டகையில் இருந்து 8 ஆடுகளை இனம் தெரியாத மர்ம விலங்குகள் கடித்துக் கொன்றன.
இந்தநிலையில் நேற்று காலையில் கொட்டகைக்கு வந்த மாடசாமி, அங்கிருந்த 14 ஆடுகளும் கழுத்திலும், வயிற்றுப்புறத்திலும் கடிகட்டு குடல் சரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டார். இதனை பார்த்து மாடசாமி அதிர்ச்சி அடைந்தார். எந்த விலங்குகள் கடித்துக் கொன்றது? என தெரியவில்லை. பின்னர் அரசு மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகு, அனைத்து ஆடுகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.