144 தடை உத்தரவு நாமக்கல்லில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் கூட்டம் அலைமோதியது

144 தடை உத்தரவு காரணமாக நாமக்கல்லில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
144 தடை உத்தரவு நாமக்கல்லில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் கூட்டம் அலைமோதியது
Published on

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. நாமக்கல் மாவட்டத்திலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. காலையில் இதர கடைகள் திறந்து இருந்தன. ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு மருந்து கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

பஸ்களை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே 60 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இவைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பின்னர் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாலை 6 மணி அளவில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இனி மறு உத்தரவு வரும் வரை அரசு பஸ்கள் இயக்கப்படாது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுக்கடைகள் மூடல்

நாமக்கல்லில் நேற்று மாலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, பஸ்களும் இயக்கப்படாததால் பஸ்நிலையம் மற்றும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆங்காங்கே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதே நிலை தான் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என மாவட்டம் முழுவதும் நீடித்தது.

இதேபோல் அரசின் உத்தரவுக்கு இணங்க நேற்று மாலை 6 மணி அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டன. முன்னதாக அந்த கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com