144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விற்பனை: பாரில், 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தஞசையில் உள்ள மதுபான பாரில் 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள், போலீசார் சோதனையில் சிக்கியது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விற்பனை: பாரில், 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தடையை மீறி யாராவது செயல்படுகிறார்களா? என அதிகாரிகள், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள ஒரு மதுபானபாரில், மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியர் வேலுமணி, கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அழகர்சாமி, தாசில்தார் வெங்கடேசன், தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார், அதிகாரிகள் கூட்டாக சம்பந்தப்பட்ட மதுபான பாருக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

2 ஆயிரம் மதுபாட்டில்கள்

அப்போது அந்த பாரில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த குவார்ட்டில் பாட்டில்கள் அடங்கிய 38 அட்டைப்பெட்டிகளும், பீர் பாட்டில்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் 1845 குவார்ட்டர் பாட்டில்களும், 200 பீர்பாட்டில்களும் என மொத்தம் 2,045 மதுபான பாட்டில்கள் இருந்தன. மேலும் ரூ.52 ஆயிரத்து 159-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் நாஞ்சிக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக தஞ்சை நகர கிழக்குப்போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com