

மதுரை,
மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவின் ஆலோசனை கூட்டம், மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று நடந்தது. புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜபார் வரவேற்றார். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறைநஷ்டம் ஏற்பட்டு தள்ளாடியது. மக்களுக்கு சரியான சேவை அளிக்கவில்லை. அதே போல் ஊழியர்களுக்கு மாதம் தோறும் சரியான தேதியில் சம்பளம் வழங்க வில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பணப்பலன் கிடைக்கவில்லை. ஆனால் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின் இந்த நிலைமை சீரானது. தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.928 கோடி மட்டுமே பணப்பலன் வழங்கப்பட்டன. ஆனால் 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6 ஆயிரத்து 958 கோடி ரூபாய் பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 12 ஆயிரத்து 707 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் மட்டும் 1,183 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றனர்.
லண்டனில் இயக்கப்பட்டு வரும் பஸ் போல மதுரையில் 50 ரெட் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை நகருக்குள் 10 குளிர்சாதன பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. மதுரையில் சிறிது தொலை தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு 30 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதே போல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் 150 மின்சார (எலக்ட்ரிக் பஸ்கள்) விரைவில் இயக்கப்பட உள்ளன. தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரையில் ஒலி பெருக்கி மூலம் அடுத்த நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பஸ்களில் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.
புதிய பஸ்கள் இயக்கினாலும், கட்டணம் உயர்த்தப்பட வில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் 70 பைசாவும், கர்நாடகாவில் 66 பைசாவும், ஆந்திராவில் 73 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.