மாவட்டம் முழுவதும் கனிமவள திருட்டில் ஈடுபட்ட 169 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கனிமவள திருட்டில் ஈடுபட்ட 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதும் கனிமவள திருட்டில் ஈடுபட்ட 169 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கனிமவள திருட்டில் ஈடுபட்ட 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் கனிமவளங்கள் திருட்டு போவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவு ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று காலையில் கோட்டூர்-கூழையனூர் சாலையில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்குள்ள முல்லைப்பெரியாற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்த கோட்டூரை சேர்ந்த மூர்த்தி மகன் கோபால் (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் இந்த ஆண்டு மண், மணல் போன்ற கனிம வளங்கள் திருட்டை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இன்று வரை (அதாவது நேற்று) கனிமவள திருட்டு தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தொடர்புடைய 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 62 டிராக்டர்கள், 15 லாரிகள், 5 பொக்லைன் எந்திரங்கள், 60 மாட்டு வண்டிகள், 22 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிலும் இந்த மாதம் மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம், 9 மாட்டு வண்டிகள், 3 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com