தஞ்சையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 50 இடங்களுக்கு 1,700 பேர் பங்கேற்பு

50 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தஞ்சையில் நடந்த ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வில் 1,700 பேர் பங்கேற்றனர்.
தஞ்சையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 50 இடங்களுக்கு 1,700 பேர் பங்கேற்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கூட்டநெரிசலை கட்டுப்படுத்துதல், திருவிழா மற்றும் முக்கிய விழாக்களின்போது போலீஸ்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படை வீரர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கவுரவ ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்ட போலீஸ்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையில் 440 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 43 வீரர்கள், 7 வீராங்கனைகள் என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.

ஆட்கள் தேர்வு

இதில் பங்கேற்க மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் விண்ணப்பம் அளித்தனர். 187 பெண்கள், 2,558 ஆண்கள் என 2,745 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்றுகாலை தொடங்கியது. இதில் 1,700 பேர் பங்கேற்றனர். அவர்களது உயரம் முதலில் சரிபார்க்கப்பட்டது. ஆடவர்களுக்கு 167 செ.மீட்டர் உயரமும், பெண்களுக்கு 157 செ.மீட்டர் உயரமும் இருக்கிறதா? என போலீசார் சரிபார்த்தனர். இவற்றில் தேர்வானர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

ஆடவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. 50 பேர் வீதம் பல பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. 7 நிமிடத்தில் 1,500 மீட்டர் தூரத்தை கடந்து சென்றவர்களுக்கு நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. பெண்களுக்கு 400 மீட்டர் தூரத்தை 3 நிமிடங்களில் கடந்து சென்றவர்களுக்கு கிரிக்கெட் பந்து எறிதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மேற்பார்வையில் நடந்த இந்த தேர்வில் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஊர்க்காவல் படை கமாண்டர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com