கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு?

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு?
Published on

பெங்களூருவைவிட்டு 3 எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

104 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜனதா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டுகிறது. இதற்காக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக சொல்லப் படுகிறது. ஆனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், பா.ஜனதாவுக்கு எதிராக வீதியில் இறங்கி மக்கள் போராட முன்வர வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி பேசியது குறித்தும், இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஷோபா எம்.பி. ரேணுகாச்சார்யா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதி என்றும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஓரிரு நாட்களில் கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும், அந்த எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் தொடர்பில் இருந்து வருவதாகவும், அவர்களுடன் இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தனது ஆதரவாளர்களிடம் எடியூரப்பா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கர்நாடகத்தைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் எடியூரப்பா உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான சுதாகர், எம்.டி.பி. நாகராஜ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ் ஆகிய 3 பேரும் நேற்று மதியம் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரே காரில் பெங்களூருவை விட்டு வெளியேறினார்கள். அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டலில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் வீடியோ காட்சிகள் நேற்று வெளியானது.

அதே நேரத்தில் அந்த 3 எம்.எல்.ஏ.க்களுடன் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 3 எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவிக்காக காங்கிரஸ் கட்சியை மிரட்டும் நோக்கத்தில் பெங்களூருவை விட்டு வெளியேறினார்களா? அல்லது பா.ஜனதா கட்சியில் சேர திட்டமிட்டு வெளியேறினார்களா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com