தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்து விட்டனர்

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்துவிட்டனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்து விட்டனர்
Published on

வேலூர்,

வேலூர் மேற்கு மாவட்ட வேலூர் கிழக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.குப்புசாமி தலைமை தாங்கினார். பகுதி மாவட்ட பிரதிநிதி உமாவிஜயகுமார், முன்னாள் நகர செயலாளர் சி.கே.மணி, முன்னாள் மண்டலக்குழு தலைவர் எஸ்.குமார், பகுதி பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி அவைத்தலைவர் டி.பிரகாசம் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சிக்கு வந்த பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றியதால் தான் தற்போது அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடுகிறோம்.

ஒரு குடும்பத்தை எதிர்த்து தான் அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை காக்க உருவாக்கப்பட்டது அ.திமு.க. கட்சி. என்ன நோக்கத்துக்காக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இந்த கட்சியை ஆரம்பித்தாரோ அதனை வழிநடத்தி ஜெயலலிதா கட்டி காத்தார். அவர் மறைவிக்கு பின்னர் ஒரு குடும்பத்தினர் தங்கள் பிடியில் அ.தி.மு.க.வை கொண்டு வர நினைக்கிறார்கள்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நலமாக உள்ளார் என்று கூறி, அனைவரையும் நம்ப வைத்து விட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் அவருடைய பல்வேறு சொத்துகளை ஒரு குடும்பத்தினர் சதி செய்து அவர்களுடைய பெயருக்கு மாற்றி கொண்டனர். 18 எம்.எல்.ஏ.க்கள் பணம், பொருளுக்கு ஆசைப்பட்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். 18 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்து விட்டனர். உண்மையான தொண்டர்கள் இருக்கும்வரை அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, தலைமை பேச்சாளர் சங்கரதாஸ் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், வேலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் டி.கே.முருகேசன், ஆவின் தலைவர் வேலழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜி.ஏ.டில்லிபாபு, பொதுக்குழு உறுப்பினர் விஜிகர்ணல், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் ராகவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், இளம்பெண், இளைஞர் பாசறை டி.டி.ஆர்.ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் நகர கூட்டுறவு துணைத்தலைவர் கே.எம்.ஆனந்தன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com