அறுவடைக்கு தயாரான 18 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன

நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்ததால் அறுவடைக்கு தாயரான 18 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன. இதற்கு உரிய பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடைக்கு தயாரான 18 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன
Published on

வெளிப்பாளையம்:

நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்ததால் அறுவடைக்கு தாயரான 18 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்தன. இதற்கு உரிய பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2-வது நாளாக மழை

வளிமண்டல சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

2-வது நாளாக நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. 2 நாட்கள் பெய்த மழையால் பாலையூர், தெத்தி, வடகுடி, பட்டமங்களம், ஆவராணி புதுச்சேரி, மீனம்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்தன.

நெற்பயிர்கள் சாய்ந்தன

வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென பெய்த மழையில் நெற்பயிர்கள் மட்டுமின்றி 20 நாட்களுக்கு முன்பு ஊடுபயிராக தெளிக்கப்பட்ட பாசிப்பயிறு மற்றும் உளுந்து பயிர்களும் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

தற்போது பெய்த திடீர் மழையால் மீண்டும் நெற்பயிர் மட்டும் இன்றி ஊடுபயிர்களும் சேதம் அடைந்துள்ளன என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வாய்மேடு

கடைமடை பகுதியான வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரம் முன்பு தான் சம்பா அறுவடை பணி தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் வாய்மேடு, தாணிக்கோட்டகம், தகட்டூர், மருதூர், தென்னடார், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம், உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது.

மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் கிடந்த வைக்கோல் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது

கொள்முதல் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ள நெல்லை தார்ப்பாய் மூலம் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. எனவே உடனடியாக அரசு உழவர் நலத் துறை மூலம் ஆய்வு நடத்தி மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர், ஒன்றியத்தில் உள்ள 64 மணலூர், ஆந்தக்குடி சிகார், காக்கழனி, வெண்மணி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்கள் பெய்த மழையால் 1000 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்து விட்டதாக கவலையுடன் தெரிவித்தனர்.

வேதாரண்யம்

தொடர் மழையால் வேதாரண்யம், தகட்டூர், பன்னாள், கருப்பம் புலம், வட மழை மணக்காடு, கரியாப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளன.

கடந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை கிடைக்காத நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்திருந்தோம்.

பெரும் நஷ்டம்

இந்த நிலையில் திடீர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்ததால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தையும், பயிர்க் காப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டர்)வருமாறு:-

வேளாங்கண்ணி 113, நாகை 99, திருக்குவளை 57, திருப்பூண்டி 56, வேட்டைகாரனிருப்பு 23, வேதாரண்யம் 13.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com