2 கடைகளின் சுவர்களை துளையிட்டு அடகுக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்

ஆரணியில் பரபரப்பான சாலையில் 2 கடைகளின் சுவர்களை உடைத்த கொள்ளையர்கள் அடகுக்கடையின் சுவரையும் உடைத்து 1 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர்.
2 கடைகளின் சுவர்களை துளையிட்டு அடகுக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்
Published on

ஆரணி,

ஆரணியில் உள்ள ஆரணிபாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணு. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் சுரேஷ் (வயது 42). வக்கீலான இவர் ஆரணி பெரியகடைவீதியில் உள்ள கட்டிடத்தில் வெள்ளிப்பொருட்கள் அடகுக்கடை வைத்துள்ளார். இவரது கடையை ஒட்டி பாழடைந்த கட்டிடம் மற்றும் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் பொது விடுமுறை நாளாக இருந்தும் இவரது கடை இயங்கியது. வேலைநேரம் முடிந்ததும் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள் அருகில் உள்ள 2 கடைகளின் சுவர்களை உடைத்து, 3-வதாக அடகுக்கடையின் சுவரையும் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரத்துடன் புகுந்துள்ளனர். அங்கு லாக்கரை வெல்டிங் மூலம் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் உறுதியான இரும்பினால் செய்யப்பட்டிருந்ததால் அவர்களால் உடைக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து பீரோவில் இருந்த 1 கிலோ வெள்ளிப்பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

நேற்று காலை அடகுக்கடையை திறப்பதற்காக வக்கீல் சுரேஷ் வந்தார். கடையை திறந்து உள்ளே சென்றபோது சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். லாக்கரை பார்த்தபோது அதில் வெல்டிங் வைத்து உடைப்பதற்கான முயற்சி நடந்திருந்தது. பீரோவை பார்த்தபோது அதிலிருந்த வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

உடனே துளையிடப்பட்ட சுவருக்குள் பார்த்தபோது அருகில் உள்ள 3 கடைகளின் சுவர்களும் துளையிடப்பட்டிருந்தன. இது குறித்து ஆரணி நகர போலீசாருக்கு அவர் தகவல் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர். கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து லாக்கர் மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 3 கடைகளின் சுவர்களையும் ஒரே நாள் இரவில் துளையிட்டு அடகுக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com