காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி, ஆகிய இடங்களில் 2ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக பேரிகை பகுதியில், மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. ரோஜா சாகுபடியாளர்கள், பல லட்சம் ரூபாய் செலவில், பசுமைக்குடில்கள் அமைத்து ரோஜா மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேரிடையாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், கூலிதொழிலாளர்கள், ரோஜா மலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என 2 லட்சம் பேர் ஈடுபட்டு, பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

காதலர் தின கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்களுக்கு கிராக்கி இருந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில், 50 லட்சம் முதல் 1 கோடி மலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டும், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் மற்றும் ரோடோஸ் வகை ரோஜாவிற்கு இந்தாண்டு கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில், அதாவது 2 கோடி மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால், மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், சீன ரோஜா மலர்களின் வருகை குறைந்திருப்பதால், இந்திய ரோஜாவிற்கு உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பா மலர் சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரூ.100 கோடி

மேலும் நல்ல விலை கிடைத்திருப்பதாலும், ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் ஏற்றுமதி வர்த்தகம் நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உள்ளூரிலும் ரோஜா மலர் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கும், கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு, அதன் மூலம் சுமார் ரூ. 5 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, உள்ளூர் மார்க்கெட்டில், 20 மலர்கள் அடங்கிய 1 கொத்து நேற்றைய நிலவரப்படி, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது ஏற்றுமதி செய்யப்படும் விலைக்கு, நிகரானதாகும். இதன் மூலம் விவசாயிகளும், வியாபாரிகளும் நல்ல லாபம் ஈட்ட முடிவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com