விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது பரபரப்பு தகவல்கள்

விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது பரபரப்பு தகவல்கள்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ராஜா என்கிற காஜா (வயது 32). பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் கணபதி நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் லாலி கார்த்திக் என்கிற சரவணன் (25) என்பவருடைய வீட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜாவும், அவரது நண்பர்களான லாலி கார்த்திக் மற்றும் விழுப்புரம் வி.மருதூர் மேல்வன்னியர் தெருவை சேர்ந்த வினோத்குமார் (28) ஆகிய 3 பேரும் கடந்த 22-ந் தேதி இரவு ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் லாலி கார்த்திக், வினோத்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜாவை கத்தியால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பதுங்கியிருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

2 பேரிடம் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட ராஜாவும், கைதான அவரது நண்பர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளனர். லாலி கார்த்திக், விழுப்புரம் கணபதி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். லாலி கார்த்திக் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜா அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அதுபோல் ராஜா வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் வினோத்குமார் வந்து சென்றுள்ளார்.

கள்ளக்காதல்

இதனால் ராஜாவிற்கும் லாலி கார்த்திக் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதுபோல் வினோத்குமாருக்கும், ராஜாவின் 2-வது மனைவி ஆனந்திக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ராஜாவுக்கு முதன் முதலில் திருமணமான மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு கடலூர் மத்திய சிறையில் ராஜா இருந்தபோது அங்கு பழக்கம் ஏற்பட்டு குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆனந்தியை 2-வது மனைவியாக சேர்த்துக்கொண்டார். அவர்கள் இருவரும் விழுப்புரம் வந்து என்.எஸ்.கே. நகரில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் வினோத்குமாருக்கும், ராஜாவின் 2-வது மனைவி ஆனந்திக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் முன்விரோதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர். அதனால் எப்படியும் என்றைக்காவது ஒருநாள் நிச்சயமாக ராஜா, நம்மை கொலை செய்து விடுவார். அதற்கு முன்பு அவரை நாம் கொலை செய்துவிட வேண்டும் என்று வினோத்குமார் எண்ணினார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு லாலி கார்த்திக்கை சந்தித்து பேசியுள்ளார். அதற்கு தனது மனைவிக்கும் ராஜாவுக்கும் இருக்கிற கள்ளத்தொடர்பு விவகாரத்தினால் இதுதான் ராஜாவை தீர்த்துக்கட்ட சரியான தருணம் என்று எண்ணி ராஜாவை கொலை செய்ய லாலி கார்த்திக்கிடம் ஒப்புக்கொண்டார்.

மது குடித்தனர்

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி லாலி கார்த்திக் தனது மனைவியை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார். பின்னர் லாலி கார்த்திக்கும், வினோத்குமாரும் சேர்ந்து ராஜாவை சந்தித்து மது குடிக்க வருமாறு அழைத்துள்ளனர். அப்போது ராஜா தனது 2-வது மனைவி ஆனந்திக்கு பிறந்த குழந்தையை பார்க்க வரும்படி நண்பர்களை அழைத்தார். பின்னர் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆனந்தியின் குழந்தையை பார்த்துள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து மாலையில் புறப்பட்டு விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குசென்று மது குடித்துள்ளனர்.

மேலும் மது குடிப்பதற்காக மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு லாலி கார்த்திக் தனது வீட்டிற்கு வினோத்குமார், ராஜாவை அழைத்து வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

அங்கு இரவு 8 மணியளவில் 3 பேரும் சேர்ந்து மீண்டும் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லாலி கார்த்திக், வினோத்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படி ராஜாவை கத்தியால் வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் இருவரும் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். ஆனால் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இருவரும் சிக்கிக்கொண்டனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com