

நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் குலசேகரன் மகன் சந்தோஷ்குமார்(வயது 31). மின்வாரிய ஒப்பந்ததாரர். இவர் சம்பவத்தன்று பணி தொடர்பாக கைக்கிழார்குப்பத்தில் உள்ள துணை மின் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த துணை மின் நிலைய காவலாளிகளான பெரிய பாப்பாங் குளத்தை சேர்ந்த கோபால் மகன் இளையராஜா(30), செல்வராஜ் மகன் கோதண்டராமன்(36), ரங்கநாதன் மகன் அறிவரசன் ஆகியோரிடம், சந்தோஷ்குமார் துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திருடு போன சம்பவம் பற்றி கேட்டுள்ளார்.
இதனால் அவருக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காவலர் இளையராஜா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சந்தோஷ்குமாரின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜா, கோதண்டராமன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான அறிவரசனை போலீசார் தேடி வருகின்றனர்.