

சாவு
சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை ஏற்றிக்கொண்டு திருத்தணி வழியாக பொதட்டூர்பேட்டைக்கு மினி டெம்போ சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. டெம்போவை பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 23) என்பவர் ஓட்டி வந்தார். அந்த டெம்போ திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் அருகே வந்தபோது டயர் பஞ்சராகி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பழ வியாபாரிகளான ருத்ரா (வயது 28), நாகராஜ் (25), சுகுமார் (26) மற்றும் தினேஷ்(18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோனேட்டம் பேட்டையை சேர்ந்த பழவியாபாரி ருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் தனசேகர் லேசான காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த நாகராஜ், தினேஷ் இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இந்த விபத்தில் மினி டெம்போவில் கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் சாலையில் கொட்டியது.
மற்றொரு விபத்து
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சாமி நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 7-ந்தேதி தனது மொபட்டில் மளிகை பொருட்கள் வாங்க அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்திற்கு சென்றார். இரவு 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வடகுப்பம் பால் குளிரூட்டும் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சுதாகர் (36) பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு வழக்குப்பதிவு செய்து வேணுகோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்.