2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, காணொலி காட்சி மூலம் மாவட்டத்தில் உள்ள 13 வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகளிடமிருந்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், மாவட்டத்தில் நிவர், புரெவி மற்றும் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 849 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 527 ஹெக்டேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெற்பயிரில் அறுவடை பரிசோதனை திடல்கள் அமைக்கப்பட்டு, 871 பயிர் அறுவடை பரிசோதனை திடல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து திடல்களிலும் அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டு, மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டிலேயே கடலூர் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக, நடப்பாண்டு சம்பா பருவத்திற்கு 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான யூரியா, டீ.ஏ.பி, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், கலப்பு உரம் ஆகியவை தேவையான அளவு இருப்பு உள்ளது என்றார்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கிட வேண்டும். விடுபட்ட விவசாயிகளுக்கும் உடனே நிவாரணம் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அருவாமூக்கு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என காணொலி காட்சி மூலமாக கோரிக்கை விடுத்தார்.

அதற்கு கலெக்டர், கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் மற்றும் வேளாண் உதவி இயக்குனர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com