5 நாட்களில் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்: சென்னை புத்தக கண்காட்சியில் அலைமோதிய கூட்டம்

சென்னை புத்தக கண்காட்சியில் நேற்று வாசகர்கள் கூட்டம் அலைமோதியது. 5 நாட்களில் மட்டும் 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
5 நாட்களில் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்: சென்னை புத்தக கண்காட்சியில் அலைமோதிய கூட்டம்
Published on

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44-வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

700 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன.

கணினி, செல்போன் ஆதிக்கம் அதிகமான போதும் புத்தகம் படிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கண்காட்சி தொடங்கிய 5-வது நாளான நேற்று வாசகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட வாசகர்கள் அதிகமாக குவிந்தனர்.

ஆர்வமாக வந்த கூட்டம்

வீட்டில் இருந்தபடியே பெரும்பாலான புத்தகங்களை ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மூலம் பெறலாம் என்ற அடுத்தகட்ட நிலைக்கு தொழில்நுட்பம் நம்மை அழைத்து சென்றுள்ள போதிலும் புத்தகங்களை நேரில் பார்த்து தேர்வு செய்யும் ஆர்வம் புத்தக வாசிப்பாளர்கள் மத்தியில் குறையவில்லை என்பதை தான் நேற்றைய கூட்டம் நிரூபித்தது.

சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக புத்தக கண்காட்சிக்கு வந்திருந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை அலசி ஆராய்ந்து வாங்கி சென்றனர். பலர் குடும்பத்தோடு வந்திருந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.

கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக பபாசி செயலாளர் எஸ்.முருகன் தெரிவித்தார். வருகிற 9-ந் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

தினத்தந்தி அரங்கில் குவிந்த வாசகர்கள்

கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீதம் தள்ளுபடியை தவிர்த்து சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி வருகிறார்கள்.

கண்காட்சியில் 242, 243 ஆகிய எண் கொண்ட ஸ்டால்களில் அமைக்கப்பட்டுள்ள தினத்தந்தி அரங்கிற்கு ஏராளமான வாசகர்கள் வந்திருந்து தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.

தினத்தந்தி அரங்கில் வெ.இறையன்பு எழுதிய செய்தி தரும் சேதி, செ.சைலேந்திரபாபு எழுதிய இளமையில் வெல், ஏவி.எம்.சரவணன் எழுதிய நானும் சினிமாவும், நெல்லை கவிநேசன் எழுதிய சிகரம் தொடும் சிந்தனைகள் உள்பட ஏராளமான புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

வரலாற்று சுவடுகள் புத்தகங்கள் 4 பாகங்களும் சேர்ந்து ரூ.1,000-க்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com