தக்கலை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கண்டக்டர் கண் எதிரே மனைவி பலியான பரிதாபம்

தக்கலை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அரசு பஸ் கண்டக்டர் கண் எதிரே மனைவி பரிதாபமாக பலியானார்.
தக்கலை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கண்டக்டர் கண் எதிரே மனைவி பலியான பரிதாபம்
Published on

பத்மநாபபுரம்,

கண்டக்டர் கண் எதிரே மனைவி பலியான விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கருங்கல் அருகே மங்கலகுன்று பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55), அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ராஜ லட்சுமி (50). இவர்களது உறவினரின் குழந்தை தக்கலை அருகே மணலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக ரவியும் அவரது மனைவி ராஜலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பார்த்த பின்பு, இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

சிறிது தூரம் சென்றதும், எதிரே நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சிதறால் அருகே கிருஷ்ணநகரை சேர்ந்த விஷ்ணு (20), சனில் (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், கணவன்-மனைவி உள்பட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராஜலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்பு பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ரவி, விஷ்ணு ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், சனில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜ லட்சுமியின் உடலை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படுகாயம் அடைந்த சனில், விஷ்ணு ஆகியோர் சுங்கான்கடையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு படித்து முடித்தனர். நேற்று கல்லூரிக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட போது இந்த விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com