

பெங்களூரு,
பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. அக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்கள் சிலர், கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 2 பேரை ராக்கிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சீனியர் மாணவர்கள், அந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 2 பேரையும் மங்கமனபாளையாவில் உள்ள ஒரு வீட்டில் இரவு முழுவதும் அடைத்து வைத்து ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் நடந்த சம்பவங்கள் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று 2 மாணவர்களையும், சீனியர் மாணவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியே சொல்லாமல் இருந்தனர்.
பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேரும், விடுதியின் வார்டன் குருமூர்த்தியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் குருமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், மாணவர்களை ராக்கிங் செய்ததுடன், அவர்களை மிரட்டியதாக, அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்களான அஜய் டாம், நஜீப், முகமது பாதல் என்ற பாசில், அமல், முகமது நாஜிக், ஷாகீர், அமுல் பின்னி ஆகிய 7 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.