டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட 2 கடைகள்-தனியார் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட 2 கடைகள் மற்றும் ஒரு தனியார் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட 2 கடைகள்-தனியார் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க தர்மபுரி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான சுகாதார குழுவினர் தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக நகராட்சி ஆணையர் தலைமையில் டெங்கு தடுப்பு சிறப்பு மருத்துவ அலுவலர் யோகானந்த், சுகாதார ஆய்வாளர்கள் ரமணசரண், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல் பாரதிபுரம் வரை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்கள், குடோன்கள், பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்கள்.

ரூ.30 ஆயிரம் அபராதம்

இந்த ஆய்வின்போது 2 கடைகள் மற்றும் ஒரு தனியார் பள்ளியில் பழைய டயர்களை அடுக்கி வைத்திருப்பதும், அதில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பழைய டயர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், தர்மபுரி நகரில் டெங்கு கொசுக்கள் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வீடுகள், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை தேக்கி டெங்கு கொசுப்புழுக்கள் வளர உகந்த சூழலை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழ்நாடு பொதுசுகாதார சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com