

கரூர்,
கரூர் தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளது. இதற்கு பின்புறம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்குவதற்கான பங்களா இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடந்தது. இந்த பணிகளுக்காக தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அங்கு கட்டப்பட்டது. நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த தொட்டியில், 7 அடி மற்றும் 5 அடி நீளமுள்ள 2 பாம்புகள் சுருண்டு கிடந்தன. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி கரூர் மாவட்ட வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் பிடித்தனர்
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனச்சரகர் நடராஜன், வனவர் பாஸ்கரன் மற்றும் கரூரை சேர்ந்த பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ள ஸ்நேக் பாபு ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் பாம்பு பிடிப்பதற்கான நவீன குச்சியின் மூலம் அதனை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த 2 பாம்புகளும் சீறியது. எனினும் சுமார் மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த 2 பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட அந்த பாம்புகள், கோதுமை நாகம் என்ற வகையை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புடன் அவை சாக்கில் போடப்பட்டு, கடவூர் வனப்பகுதியில் விடப்பட்டன.