

கொள்ளிடம் டோல்கேட்,
தூத்துக்குடியை சேர்ந்த நடராஜன் மகன் இசக்கிகண்ணன் (வயது 19). உத்தரபிரதேச மாநிலம் கந்தராப்பூர் பகுதியை சேர்ந்த ராம்தேவ் மகன் பப்லுயாதவ் (31). இவர்கள் இருவரும் திருச்சி அரியமங்கலம் பகுதியில் முனியப்பன்கோவில் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, பொக்லைன் எந்திர ஆபரேட்டர்களாக வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் முசிறிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வாத்தலையை அடுத்த குணசீலம் அருகே சென்ற போது, எதிரே பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் ரமேஷ்குமாரை(38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.