மின்வாரிய அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
மின்வாரிய அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

மின்வாரிய அதிகாரி

திருவண்ணாமலை தாமரை நகர் 21-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 58). இவர், திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரின் மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் என்ஜினீயரிங் முடித்துள்ளார். மகள் கீர்த்தனா (26) குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

ராஜசேகரன் மகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) திருமணம் நடக்க உள்ளது. அதற்காக ஜவுளி எடுக்க குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு 7-ந்தேதி சென்றனர்.

வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். ராஜசேகரனின் வீடு திறந்து கிடந்தை பார்த்த அங்கிருந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர், அலுவலகத்தில் தன்னுடன் வேலைப் பார்ப்போரை வீட்டுக்கு அனுப்பி வைத்து பார்த்து வருமாறு கூறினார். அவர்களும் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர். வீட்டில் பீரோக்கள் திறந்து கிடந்தன.

20 பவுன் நகை கொள்ளை

இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றி ராஜசேகரனிடம் கேட்டபோது, அவர் தனது மகள் திருமணத்துக்காக வங்கியில் இருந்து எடுத்து வந்த நகைகளும், மனைவியின் நகைகளும் சேர்த்து மொத்தம் 75 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை பீரோவில் வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதில் பீரோவின் லாக்கரில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மற்ற 55 பவுன் நகையை துணிப்பயில் வைத்து, துணிகளுக்கிடையே பதுக்கி வைத்திருந்ததால் தப்பியது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com