

அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் மர்மநபர்கள் நுழைந்து 20 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதும் பயந்து தப்பியோடி விட்டார்.
பள்ளி ஆசிரியை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த கெங்கநல்லூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம், ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவரின் மனைவி சித்ரா (வயது 54). இவர், ஒடுகத்தூர் அருகில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அவர்களின் மகள் வினிவர்ஷா (23).
வழக்கம்போல் சித்ரா பள்ளிக்குச் சென்று விட்டார்.
மகாலிங்கம் சொந்த வேலையாக வேலூருக்குச் சென்றுள்ளார். மகள் வினிவர்ஷா வீட்டில் தனியாக இருந்தார். பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர்கள் 2 பர் மகாலிங்கம் வீட்டின் பின்பக்கமாக வந்து மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு இரும்புக்கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
கத்தியை காட்டி மிரட்டினர்
அப்போது வீட்டில் தனியாக இருந்த வினிவர்ஷாவிடம் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். பயந்து போன வினிவர்ஷா வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி விட்டார். மர்மநபர்கள் பீரோவின் மேலிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சன்றனர்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தாயார் சித்ராவிடம் கொள்ளை சம்பவம் குறித்து மகள் வினிவர்ஷா தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியை சித்ரா உடனே அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். மேலும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கன்னிகாபுரத்தில் தனியாக வீடு கட்டி வசித்து வரும் மகாலிங்கத்தின் வீட்டுக்கு அருகே ஹாலோ பிரிக்ஸ் தொழிற்சாலை உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களின் புகைப்படம் பதிவாகி உள்ளதா? எனப் போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.