

கள்ளக்குறிச்சி,
இன்று (புதன்கிழமை) விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக 2 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.
இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் மையமான கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகாவிடம், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான முக கவசம், சானி டைசர் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விடைத்தாள் திருத்தும் மையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கிரண்குராலா கூறுகையில், இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும் வரை தினசரி 2 முறை விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும். வெளியூர்களில் இருந்து வரும் ஆசிரியர்களின் வசதிக்காக 12 வழித்தடங்களில் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.