

20 ஆயிரம் கன அடி தண்ணீர்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பூண்டி ஏரியில் உபரிநீர் வந்து கொண்டிருப்பதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்றின் குறுக்கே மீஞ்சூர் அருகே சீமாபுரம் கிராமத்தில் உள்ள வல்லூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.
இதனால் சுப்பாரெட்டிபாளையம், நாப்பாளையம், மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
லட்சுமிபுரம் அணைக்கட்டு
கடந்த 4 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆலாடு கிராமத்தில் உள்ள லட்சுமிபுரம் அணை நிரம்பிய நிலையில் 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியே செல்கிறது.
இந்த நீர் ரெட்டிபாளையம், பெரும்பேடு குப்பம், வஞ்சிவாக்கம், தத்தைமஞ்சி, ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து முகத்துவாரம் வழியாக வங்க கடலில் கலக்கிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பெரும்பேடு குப்பம் அருகே கடந்த 19-ந்தேதி ஆரணி ஆற்றங்கரை உடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீண்டும் உடைப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.