குடியாத்தம் அருகே வயல்களுக்குள் புகுந்த 20 காட்டு யானைகள் அட்டகாசம்

குடியாத்தம் அருகே வயல்களுக்குள் புகுந்த 20 காட்டுயானைகள் மாமரங்களை நாசப்படுத்தின. தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
குடியாத்தம் அருகே வயல்களுக்குள் புகுந்த 20 காட்டு யானைகள் அட்டகாசம்
Published on

குடியாத்தம்,

ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கு, 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன. காட்டுயானைகள் தமிழக எல்லைப் பகுதியில் 4 மாதமாக தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு கொட்டமிட்டா பகுதியில் பாபு, வெங்கடேசன், கணேசன், சாம்பசிவம், ஜலபதி, உஸ்மான் ஆகியோரின் மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் மாமரங்களை சேதப்படுத்தின.

அங்குள்ள தண்ணீர் குழாய்களை உடைத்தன. மாங்காய்களையும் தின்று தீர்த்து வீசின. தும்பிக்கையால் கிளைகளை பிடித்து உலுக்கி மாங்காய்களை உதிர செய்தன. தகவல் அறிந்ததும், வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

மா மரங்கள் சேதம்

நேற்று முன்தினம் இரவு மீண்டும் 14 காட்டுயானைகள் கொட்டமிட்டா பகுதியில் சுற்றித்திரிந்தன. அங்குள்ள ராஜகோபால், பேபிஅம்மாள், கிஷோர் ஆகியோரின் மாந்தோப்புக்குள் புகுந்து மா மரங்களின் கிளைகளை முறித்து நாசப்படுத்தின. குடியாத்தத்தை அடுத்த பரதராமி, கொத்தூர் பகுதியிலுள்ள மோகன் என்பவரின் மாந்தோப்பில் 6 காட்டு யானைகள் புகுந்தன.

தகவல் அறிந்ததும் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் பூபதி, நீலகண்டன் மற்றும் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டினர். நேற்று முன்தினம் ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு பகுதிகளில் புகுந்து வேளாண் சார்ந்த பயிரை சேதப்படுத்தின.

6 மணிநேரம் போராடி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் பிரகாஷ், வனக் காப்பாளர்கள் வனராஜ், சிவன், வெங்கடேசன், பிரபு, சபரி உள்பட 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் நேற்று காலையில் இருந்து மதியம் வரை ஆம்பூராம்பட்டி பகுதியில் சுற்றித்திரிந்த 14 காட்டு யானைகளை 6 மணிநேரம் போராடி மாலையில் மோர்தானா காட்டு வழியாக விரட்டியடித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com