காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி, சேப்பாக்கம் அரசு பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருட்டு - முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி சேப்பாக்கம் அரசு பள்ளியில் 22 மடிக்கணினிகளை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி, சேப்பாக்கம் அரசு பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருட்டு - முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
Published on

வேப்பூர்,

வேப்பூர் அருகே சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு வழங்குவதற்காக நடப்பாண்டில் 179 மடிக்கணினிகள் வந்தன. அதில் 140 மடிக்கணினிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள 39 மடிக்கணினிகள் பள்ளியில் உள்ள கணினி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த அறைக்கு காவலாளியாக கலியன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் அறை முன்பு இருந்து மடிக்கணினி இருந்த அறையை கண்காணித்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலியன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி வந்தது. அவர்கள் திடீரென கலியன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

பின்னர் கணினி அறையை திறந்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 22 மடிக்கணினிகளை மட்டும் திருடிச்சென்று விட்டனர். உடன் இது பற்றி கலியன் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் தேவசேனா வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளியில் முகமூடி அணிந்து மடிக்கணினிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com