பக்தர்கள் சென்ற வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 23 பேர் காயம்

திருச்சி அருகே பக்தர்கள் சென்ற வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.
பக்தர்கள் சென்ற வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 23 பேர் காயம்
Published on

கொள்ளிடம் டோல்கேட்,

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, எறும்பூர் மாரியம்மன் கோவில் கிராமத்தை சேர்ந்த 6 குழந்தைகள் உள்பட 22 பேர், பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதையடுத்து நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பழனி முருகன் கோவிலுக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை டிரைவர் அதே பகுதி சின்னநெற்குணம் தெற்கு தெருவை சேர்ந்த பஞ்சநாதன் மகன் பாலமுருகன் (வயது 29) ஓட்டினார்.

நேற்று காலை பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அனைவரும் அதே வேனில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டை அடுத்த கூத்தூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, அதே திசையில் வந்த கார் ஒன்று வேனை முந்தி செல்வதற்காக வேகமாக முன்னோக்கி சென்றது. அப்போது காரின் குறுக்கே மாடு ஒன்று ஓடியதால் அதன் மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் திடீரென காரை வலது புறமாக திருப்பினார். இதில் எதிர்பாராதவிதமாக வேன் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் நிலை தடுமாறிய வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தால் வேனுக் குள் இருந்தவர்கள் அய்யோ..., அம்மா..., காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இதில் குழந்தைகள், டிரைவர் உள்பட 22 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். வாசுகி என்ற பெண் படுகாயமடைந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வேனை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com