தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் நேற்று 24 பெருமாள்கள் கருடசேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் நரசிம்மப் பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதன்படி 85-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 பெருமாள் கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருடவாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி தஞ்சை கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.

அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை தொழுதவண்ணம் முதலில் சென்றார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள் லட்சுமியுடன் வந்தார். இவர்களை தொடர்ந்து நரசிம்மப் பெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்ற பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன் கோவில்தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாத பெருமாள், மேலவீதி விஜயராம பெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன்தெரு பூலோக கிருஷ்ணன், மகர்நோம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயண பெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டு தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

24 பெருமாள்களையும் பக்தர்கள் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசமடைந்தனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர். கருடசேவை விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

கருடசேவையை முன்னிட்டு நான்கு ராஜவீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானம், நீர்மோர் போன்றவை வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இன்று காலை 6 மணிக்கு பெருமாள்கள் நவநீத சேவையில் புறப்பட்டு காலை 8 மணிக்கு கொடிமரத்து மூலையை வந்து அடை கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து கீழராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகள் வழியாக அனைவருக்கும் காட்சி அளித்து வந்த வழியே அவரவர் கோவில்களுக்கு சென்றடைவர். நாளை (திங்கட்கிழமை) விடையாற்றி விழா நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com