நாமக்கல் கடைவீதியில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது

நாமக்கல் கடைவீதியில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
நாமக்கல் கடைவீதியில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது
Published on

நாமக்கல்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர் நாமக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் நேற்று அத்துறையின் அலுவலர்கள் கடையின் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி அளவில் அசோக்குமார் கடையை திறந்தவுடன், ஒருவர் புகையிலை பொருட்களை வாங்க வந்தார். இதையடுத்து அதிகாரிகள் அதிரடியாக கடைக்குள் புகுந்து, அங்கிருந்த 25 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரத்து செய்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

அசோக்குமாருக்கு சொந்தமான கடையில் இருந்து 3 வகையான புகையிலை கலந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவை அனைத்திலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை மற்றும் நிக்கோடின் உள்ளது.

எனவே 3 உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அந்த சோதனை முடிவு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனிவரும் காலங்களில் எந்த கடையானாலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக லைசென்சு ரத்து செய்யப்படும். இதேபோல் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டால் கடைக்கு சீல் வைத்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com