கொத்தமங்கலத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆட்டுக்குட்டிகள் செத்தன

கொத்தமங்கலத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆட்டுக்குட்டிகள் செத்தன.
கொத்தமங்கலத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆட்டுக்குட்டிகள் செத்தன
Published on

கீரமங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் உடையார்வலசை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 50). செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். பருவமழை முடிந்துவிட்டால், கோவிந்தராசு காவிரி டெல்டா பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆடுகளை ஓட்டி வந்தார். ஆனால் காவிரி டெல்டா பகுதியில் இன்னும் கதிர் அறுவடை செய்யப்படாததால், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் கோவிந்தராசு, செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார்.

இரவில் விவசாயிகளின் தோட்டங்களில் வலை தடுப்புகளை ஏற்படுத்தி கிடை அமைத்து, அவற்றுக்குள் ஆடுகளை அடைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

25 ஆட்டுக்குட்டிகள் செத்தன

இதில் கடந்த சில நாட் களாக கொத்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி சித்திரவேல் என்பவருடைய தோட்டத்தில் கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பல செம்மறி ஆடுகள் குட்டிகளை ஈன்றுள்ளன. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை மிகவும் சிறிய குட்டிகளாக இருந்தன. இதனால் அவற்றை ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியாது என்பதால், வலை தடுப்புகளுக்குள் பெரிய கூடையில் குட்டிகளை அடைத்து வைத்துவிட்டு, ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.

அதேபோல் நேற்றும் குட்டிகளை கூடையில் அடைத்து வைத்துவிட்டு, ஆடுகளை மேய்க்கச் சென்ற கோவிந்தராசு இரவு நேரத்தில் ஆடுகளுடன் திரும்பி வந்தார். அப்போது கூடைக்குள் அடைக்கப்பட்டிருந்த 25 ஆட்டுக்குட்டிகள், நாய்களால் கடித்து குதறப்பட்டு செத்து கிடந்தன. மேலும் சில குட்டிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அந்த பகுதியில் பல நாய்கள் சுற்றி வந்தன. இதைப் பார்த்த கோவிந்தராசு கதறி அழுதார்.

குழந்தைகளையும் கடிக்கின்றன

இதுபற்றி அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், இதுபோல் கொத்தமங்கலம் பகுதியில் அடிக்கடி ஆடு, மாடுகள் மட்டுமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என பலரையும் நாய்கள் கடித்துவிடுகின்றன, என்றனர். ஒரே நேரத்தில் 25 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com