

பெங்களூரு,
பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரு விமான நிலையம் சரக்கு விமானங்களையும் கையாண்டு வருகிறது.
இந்த நிலையில் காதலர் தினத்தையொட்டி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்கள் மூலம் 273 டன் ரோஜா பூக்கள் பறந்து சென்று உள்ளன. இதுகுறித்து பெங்களூரு விமான நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது.
காதலர் தினத்தையொட்டி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சரக்கு விமானங்கள் மூலம் சிங்கப்பூர், லண்டன், துபாய், குவைத், கோலாலம்பூர், ஆக்லாந்து, பீருட், மணிலா ஆகிய வெளிநாடுகளுக்கு 170 டன் ரோஜாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதுபோல கொல்கத்தா, டெல்லி, பக்டோக்ரா, சண்டிகர், மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், சென்னை ஆகிய உள்நாடுகளுக்கு 103 டன் ரோஜாக்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் அதிக ரோஜாக்களை அனுப்பி வைத்து பெங்களூரு விமான நிலையம் புதிய சாதனை படைத்து உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.