குமரியில் 28,793 நகைக்கடன்கள் தள்ளுபடி மண்டல இணைப்பதிவாளர் தகவல்

குமரி மாவட்டத்தில் 127 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 28 ஆயிரத்து 793 நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்று மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
குமரியில் 28,793 நகைக்கடன்கள் தள்ளுபடி மண்டல இணைப்பதிவாளர் தகவல்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 127 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 28 ஆயிரத்து 793 நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்று மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

28,793 நகைக்கடன்கள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை பேரவை விதி 110-ன்கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகையீட்டின் பேரில் கடன் வழங்கப்பட்டு, 31-3-2021 வரை நிலுவையில் உள்ள பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின்கீழ் செயல்படும் 127 நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கிய பொது நகைக்கடன்களில், தள்ளுபடிக்கு தகுதி என 28 ஆயிரத்து 793 நகைக்கடன்கள் கண்டறியப்பட்டு, ரூ.116 கோடியே 62 லட்சத்து 54 ஆயிரம் தள்ளுபடி செய்வது என கூட்டுறவு தணிக்கையில் கண்டறியப்பட்டது.

கடன் தள்ளுபடி சான்று

அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்று மற்றும் ஈடு வைக்கப்பட்ட நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதவர்கள், மேல் முறையீடு செய்ய விரும்பினால், நகை தள்ளுபடி பட்டியல் சங்கத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளர்களுக்கு மேல் முறையீடு செய்யலாம். நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களை தொடர்பு கொண்டு தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com