கே.வி.குப்பம் அருகே 2 வயது பெண் குழந்தை சாவில் ‘திடீர்’ திருப்பம் - தரையில் அடித்துக் கொன்றதாக கட்டிட தொழிலாளி கைது

கே.வி.குப்பம் அருகே 2 வயது குழந்தை இறந்ததில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை தரையில் அடித்து கொலை செய்ததாக கட்டிடத்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கே.வி.குப்பம் அருகே 2 வயது பெண் குழந்தை சாவில் ‘திடீர்’ திருப்பம் - தரையில் அடித்துக் கொன்றதாக கட்டிட தொழிலாளி கைது
Published on

கே.வி.குப்பம்,

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் லட்சுமணன்-சாந்தி. இவர்களின் மகள் லாவண்யா (வயது 20). இவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவரான சிவசக்திவேல் (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கலைரஞ்சனி எனப் பெயர் சூட்டினர். அந்தப் பெண் குழந்தைக்கு வயது 2.

இந்தநிலையில் சிவசக்திவேல், லாவண்யாவை உதறி விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மகளுடன் தனியாக வசித்து வந்த லாவண்யா கோபித்துக் கொண்டு தாயார் பிறந்த வீடான வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்துக்கு மகளுடன் வந்து வேலூர் வள்ளலார் பகுதியில் கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த கட்டிடத் தொழிலாளியான கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தைச் சேர்ந்தவரும், திருமணம் ஆகாதவருமான பிரவீன்குமார் (21) என்பவருக்கும், லாவண்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லாவண்யாவும், பிரவீன்குமாரும் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இருவரும், கே.வி.குப்பம் பகுதியில் வசித்து வந்தனர். 17-ந்தேதி இரவு கலைரஞ்சனி திடீரென இறந்தாள. இது குறித்து லாவண்யா, தாயார் சாந்தி, 2-வது கணவர் பிரவீன்குமார், இவருடைய தந்தை வெங்கடேசன் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

17-ந் தேதி இரவு 8.30 மணியளவில் பிரவீன்குமாரும், வெங்கடேசனும் குடிபோதையில் இருந்தனர். பிரவீன்குமார், கலைரஞ்சனியோடு விளையாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த வெங்கடேசன், யாரோ பெற்ற குழந்தையோடு நீ கொஞ்சி விளையாடுகிறாயே என மனம் புண்படும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், கலைரஞ்சனி யார் பெற்ற குழந்தை? என லாவண்யாவை கேட்டுள்ளார். அதற்கு அவர், குழந்தை தனது முதல் கணவருக்கு பிறந்த என்னுடைய குழந்தை என ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.

மேலும் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், லாவண்யாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கி தரையில் அடித்துக் கொலை செய்ததாக, போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார். கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், பிரவீன்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கட்டித்தொழிலாளி பிரவீன்குமார் கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com