திருப்பூரில் 3 நாட்கள் ஊரடங்கு எதிரொலி: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருப்பூரில் 3 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்ததின் எதிரொலியாக காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூரில் 3 நாட்கள் ஊரடங்கு எதிரொலி: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Published on

திருப்பூர்,

விஞ்ஞான வளர்ச்சியால் கண்ணுக்கு தெரிந்த அணு ஆயுத மோதல் எப்போது ஏற்படுமோ? என்று மனித குலம் அஞ்சி நடுங்கும் வேளையில் கண்ணுக்கு தெரியாமலே மனித இனத்தை வேரறுக்க கிளம்பிய கொரோனா என்னும் கொடிய வைரசில் இருந்துதப்பிக்க உலக நாடுகள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன.

இந்த வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்காத நிலையில் அந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருந்தால் போதும் என்று தற்காப்பு நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தனிமனித விலகலே கொரோனாவை விரட்டும் ஆயுதம் என்று அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அதை கடை பிடித்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மக்கள்நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

ஆனாலும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் வெளியே வருவது குறைந்தபாடில்லை. இதை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலும், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் வழக்கம் போல் வருகிறார்கள். இதன் காரணமாக நகர்புறங்களில் நோயின் தாக்கம் சற்று கடுமையாக உள்ளது.

எனவே ஒரு சில மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் காலையிலேயே சென்று 3 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கி விடவேண்டும் என்று பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை முதலேயே திருப்பூரில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அது போக போக வாகன நெருக்கடியாகவே மாறிப்போனதை காணமுடிந்தது.

மக்கள் வெள்ளம்

பஸ்நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளுக்கும், உழவர் சந்தைக்கும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சென்று காய்கறிகளை போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் கூடைகளிலும், சாக்குப்பைகளிலும் காய்கறிகளை அள்ளி சென்றனர்.

திருப்பூர் உழவர் சந்தையில் உள்ள காய்கறிகள் விற்று தீர்ந்து விடுமோ என்ற பயத்தில் வரிசையில் நின்றவர்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு சமூக இடை வெளியை கூட கடை பிடிக்காமல் காய்கறி வாங்கி சென்றனர். அதுபோல் மளிகை கடைகளிலும் அதே நிலைதான். சில பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் தினமும் காலை 5 மணி முதல் காலை 9.30 மணிவரை செயல்பட்டு வந்த காய்கறி கடைகளில் நேற்று மதியம் 1 மணிவரை செயல்பட்டது. அதே போல் எண்ணெய் கடை மற்றும் மளிகை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

வாகன நெரிசல்

கடைகளுக்கு கார், இரு சக்கர வாகனங்களில் மக்கள் திரண்டு வந்ததால், சில கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திணறினார்கள். இதனால் ஆங்காங்கே சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் திருப்பூரில் கடைகள் இருக்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம்தான் காணப்பட்டது.

அதனால் சமூக இடைவெளி என்பது அனைத்து இடத்திலும் கேள்விக்குறியாகவே இருந்தது என்பது நிதர்சனமான உண்மை. அது போல் சாலைகளிலும் ஊரடங்கு என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் வாகன நெரிசல் இருந்தது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று 15 டன் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இங்கு சில்லரை விற்பனை நடக்கவில்லை. மொத்த விற்பனை மட்டுமே நடந்தது. அதன்படி ஒருகிலோ கத்தரிக்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.45-க்கும், பாகற்காய் ரூ.45-க்கும், பீர்க்கன்காய் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், சுரைக்காய் ரூ.25-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.30-க்கும், கேரட் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் 19 டன் காய்கறி கொண்டு வரப்பட்டது. அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்து விட்டன.

மீன் மார்க்கெட்

திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் 30 டன் மீன் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மட்டுமே மொத்த மீன் விற்பனை நடந்தது. அனைத்து மீன்களும் விற்று தீர்ந்து விட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட கட்லா, பாறை ரூ.180-க்கும், ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோகு ரூ.160-க்கும், ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட நெய் மீன் ரூ.110-க்கும், ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட மிருகால் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து மீன் மொத்த வியாபாரிகள் கூறும்போது மீன் விற்பனை தள்ளுவண்டிகள் மூலம், அந்தந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் அறிவித்து இருந்தார். இதனால் விற்பனை குறைந்துள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com