தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கொடுமுடியில் கைது

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கொடுமுடியில் கைது செய்யப்பட்டார்கள்.
கைதான பிரபல கொள்ளையர்கள் ஷேக் தாவுத், சூசைராஜ், யாசர் அரபாத் ஆகியோரை படத்தில் காணலாம்.
கைதான பிரபல கொள்ளையர்கள் ஷேக் தாவுத், சூசைராஜ், யாசர் அரபாத் ஆகியோரை படத்தில் காணலாம்.
Published on

பணப்பை பறிப்பு

திருச்சியில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. பஸ்சை ராஜமாணிக்கம் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக கரூர் மாவட்டம் போயம்பள்ளியை சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பவர் இருந்தார்.

பஸ் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பஸ் நிலையம் வந்ததும், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் திடீரென கண்டக்டர் கார்த்திக்கிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்கள். உடனே அவர் திருடன், திருடன், என கத்தினார். சத்தம் கேட்டதும் பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் ஓடிவந்து பணப்பையை பறித்து சென்ற 3 வாலிபர்களையும் துரத்தி பிடித்தார்கள். பணப்பையும் மீட்கப்பட்டது.

கோவிலில் கொள்ளை

அதன்பின்னர் பிடிபட்டவர்கள் கொடுமுடி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்கள். போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவுத் (36), திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த யாசர் அரபாத் (25), சூசைராஜ் (28) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி மற்றும் பல பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் சீரங்ககவுண்டன் என்ற ஊரில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அதே ஊரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த தங்க நகைகள், 14 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி உள்ளனர்.

தர்காவில் கைவரிசை

இதுதவிர கடந்த 16-ந் தேதி ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவலர் குடியிருப்பில் ஒரு போலீஸ்காரரின் மோட்டார்சைக்கிளையும் திருடி உள்ளார்கள். அதே மோட்டார்சைக்கிளில் 3 பேரும் சென்று அன்று இரவு ஊஞ்சலூர் அருகே உள்ள காசிபாளையம் தர்காவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அதன்பிறகு மறுநாள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சென்று அங்கு காட்டுமன்னார் கருப்பண்ணசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்துள்ளனர்.

சிறையில் அடைப்பு

அப்போது அக்கம் பக்கத்தினர் பார்த்து ஓடி வந்ததும், 3 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கொடுமுடி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி 3 பேரும் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com