3 அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்ககோரி 3 அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
Published on

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் அணைக்கட்டு கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள செம்பூர், பரசநல்லூர், தண்டரை, பொய்கைநல்லூர், புறஞ்சேரி, கீழ்நீர்குப்பம், தாதங்குப்பம், குமாரகுப்பம், மாணிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அணைக்கட்டு கிராமத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 2 அரசு பஸ்கள் காலை 7 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதிய வேளையில் இயங்கி வந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால் கிராம மாணவர்கள் மற்றும் நோயாளிகள் உள்பட பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் பல முறை கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று காலை 7.30 மணியளவில் அணைக்கட்டு பஸ் நிறுத்தத்தில் கூடினர். அப்போது அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்களையும் சுற்றி நின்று சிறை பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மதுராந்தகம் போக்குவரத்து பணிமனை மேலாளர் சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகளும் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து 9 மணியளவில் சிறைபிடித்த பஸ்களை விடுவித்த பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com