திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு; தொடர் சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அவதி

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியை படத்தில் காணலாம்
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியை படத்தில் காணலாம்
Published on

திம்பம் மலைப்பாதை

சத்தியமங்கலத்தை அடுத்து திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை உள்ளது. இ்ந்த மலைப்பாதையில் குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இதனால் இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

நிரந்தர தீர்வு

குறிப்பாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் வாடிக்கையான நிகழ்வுகளாக மாறிவிட்டன.

இதன்காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும், அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதிப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனினும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை..

சிமெண்டு அட்டை பாரம்

இந்தநிலையில் கரூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்டு அட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று சென்று கொண்டிருந்தது. காலை 7 மணி அளவில் இந்த மலைப்பாதையின் 17-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக லாரி பழுதாகி நின்றது. எவ்வளவோ முயன்றும் லாரியை, டிரைவரால் இயக்க முடியவில்லை.

இதனால் திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் சம்பவ இடத்துக்கு மெக்கானிக் அழைத்து வரப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது 10 மணி அளவில் சரி செய்யப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தாடர்ந்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிக அளவு எடை கொண்ட பாரங்களை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் அளவுக்கு அதிகமான உயரங்களுடன் பாரங்களை ஏற்றி வரும் லாரிகள் ஆகியவற்றால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதற்கு தீர்வு காணும் பொருட்டு பண்ணாரி சோதனை சாவடி மற்றும் ஆசனூர் சோதனை சாவடியில் தடுப்பு கம்புகள் வைக்கப்பட்டன. இதனால் அதிக அளவு உயரத்துக்கு பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் திம்பம் மலைப்பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வாகன எடை மேடை

எனினும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமான எடையுள்ள பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் இந்த மலைப்பாதையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திம்பம் மலைப்பாதையில் 5 முறை லாரிகள் பழுதாகி நின்று உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், இந்த மலைப்பாதை வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களில் வந்த பயணிகள் கடும் அவதி உடைந்து உள்ளனர்.

எனவே பண்ணாரி சோதனை சாவடி மற்றும் ஆசனூர் சோதனை சாவடி பகுதியில் வாகன எடை மேடை அமைத்தால், அதிக எடையுள்ள பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் ஏறவிடாமல் தடுக்க முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும், என காரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com