சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் இளம்பெண் உள்பட 3 பேர், கடலில் மூழ்கி சாவு பெங்களூருவை சேர்ந்தவர்கள்

கார்வார் அருகே கடலில் மூழ்கி இளம்பெண் உள்பட 3 பேர் இறந்தனர். பெங்களூருவை சேர்ந்த இவர்களுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் இளம்பெண் உள்பட 3 பேர், கடலில் மூழ்கி சாவு பெங்களூருவை சேர்ந்தவர்கள்
Published on

பெங்களூரு,

பெங்களூரு ஹெப்பகோடி அருகே திருபாளையா பகுதியை சேர்ந்தவர்கள் சுமா (வயது 21), திப்பேஷ் (20), ரவி (25). இவர்கள் உள்பட 16 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்றனர். தட்சிண கன்னடா, உடுப்பியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த 16 பேரும் நேற்று காலை உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் கோகர்ணாவுக்கு சென்றனர். அங்கு கோகர்ணா நாத கோவிலில் சாமி தரிசனம் செய்த 16 பேரும் கோகர்ணா கடற்கரைக்கு சென்றனர்.

பின்னர் 16 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் சுமா, திப்பேஷ், ரவி ஆகியோர் திடீரென கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து உடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.

இதுபற்றி அறிந்த கோகர்ணா போலீசார், கடலோர காவல்படையினர் மீட்பு படகில் சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களின் உடல்களை பார்த்து உடன் சென்றவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோகர்ணா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com