சோழிங்கநல்லூரில் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போன்கள் திருடிய 3 பேர் கைது

சோழிங்கநல்லூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போன்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூரில் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள், செல்போன்கள் திருடிய 3 பேர் கைது
Published on

திருட்டு

சோழிங்கநல்லூர் துரைசாமி தெரு, கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). இவர் சோழிங்கநல்லூர் அன்னை இந்திரா தெருவில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 2 மடிக்கணினிகள், 7 புதிய செல்போன்கள், பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 5 செல்போன்கள், 3 வாட்ச்சுகள், ஒரு ஸ்பீக்கர் பாக்ஸ் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

செம்மஞ்சேரி காவல் உதவி ஆணையாளர் கருணாகரன் மேற்பார்வையில், செம்மஞ்சேரி போலீஸ் நிலைய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜமிஸ்பாபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடிவந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர், காந்தி நகர் ஏரிக்கரை அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் விசாரித்த போது 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் அவர்களை மடக்கிபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆவடி திலகர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்ற டாட்டூ சதீஷ் (21), ஆவடி சின்னம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் என்ற சைக்கோ சஞ்சய் (23), ஆவடி காந்தி தெருவை சேர்ந்த ராகேஷ் (21) என்பதும் இரவு நேரங்களில் 3 பேரும் பூட்டியிருக்கும் கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடும் தொழிலை செய்து வந்ததாகவும் அதேபோல் கடந்த 14-ந்தேதி அதிகாலை சோழிங்கநல்லூர் அன்னை இந்திரா தெருவில் பூட்டியிருந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், செல்போன்கள், வாட்ச்சுகள், ஸ்பீக்கர் பாக்ஸ் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com