3 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது - திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தகவல்

கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
3 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது - திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

கரூர்,

கரூர் ஜவகர்பஜார் பகுதியில் முன்பிருந்த கரியமால் ஈஸ்வரர் கோவில் காலப்போக்கில் காணாமல் போனது. அதன் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில் நலத்தை ஒப்படைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு நேற்று சென்று ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வருகிற 12-ந் தேதிக்குள் இதனை கோவிலுக்கு திரும்ப ஒப்படைப்பது பற்றிய அறிவிப்பாணையை அங்கு ஒட்டினர். அப்போது கரூர் தாசில்தார் கலியமூர்த்தி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராசாராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

கரூரில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த திருக்கோவில் நிலங்களில் பட்டா மாற்றம், ஆவணப்பதிவு, மின் இணைப்பு போன்றவற்றிற்காக நில அபகரிப்பாளர்களுக்கு எந்த துறை அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 120-ன் கீழ் கூட்டு சதி என்பதன் பேரிலான நடவடிக்கைக்காக உட்படுத்தப்படுவார்கள். இதன் பிடியிலிருந்து அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் யாரும் தப்பிக்க முடியாது. தமிழக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் கூட கரூர் அருகேயுள்ள ஒரு கோவில் நிலத்தினை அனுபவித்து வருவது தெரிய வந்திருக்கிறது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மடவளாக பகுதி மதுரை ஐகோர்ட்டு கிளையினால் உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் சட்டமுறைப்படி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

குறுகிய மாதங்களுக்குள்ளாக அனைத்து ஆக்கிரமிப்பு சொத்துகளும் மீட்கப்பட்டு திருக்கோவிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். கரூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று (நேற்று) பார்வையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை நில அளவை செய்து வேலி அமைக்கப்படும். இந்த ஆக்கிரமிப்புகளில் பலவகை உள்ளது. 12 ஆண்டுகள் ஒரே இடத்தில் குடியிருந்தால் தனக்கு சொந்தமாகிவிடும் என நினைக்கிறார்கள். இந்த சட்ட வரையரை அறநிலையத்துறை திருக்கோவில் நிலங்களுக்கு கிடையாது.

சில இடத்தில் கோவிலையே அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பு செய்வது தான் கொடுமையானதாக இருக்கிறது. அந்த வகையில் ஜவகர்பஜார் பகுதியில் முன்பு கரியமால் ஈஸ்வரர் என்கிற கோவில் இருந்தது. அந்த கோவில் அழிக்கப்பட்டு அங்கிருந்த சிலைகள் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது. சிவன் சொத்து குலநாசம் என்பதை உணர்ந்து கோவில் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் அதனை திரும்ப ஒப்படைக்க முன்வர வேண்டும். அப்பாவி மக்கள் திருக்கோவில் அபகரிப்பில் உள்ள சொத்துகளை வாங்கி ஏமாந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com