திருவாரூரில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 30 மனுக்கள் பெறப்பட்டன

திருவாரூரில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 30 மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் பெற்று கொண்டார்.
திருவாரூரில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 30 மனுக்கள் பெறப்பட்டன
Published on

திருவாரூர்,

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் தலைமை தாங்கினார். அப்போது திருவாரூர் தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டாமாறுதல், நில அளவை, பட்டா, பெயர் மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்பட 30 கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, தகுதியான மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்.

அப்போது உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார். பின்னர் திருவாரூர் தாலுகாவை சேர்ந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் பதிவேடு, அடங்கல், பட்டா படிவம், நன்செய், புன்செய் கழிவு கணக்கு, பயிராய்வு கணக்கு, பட்டா பதிவேடு, பட்டா மாறுதல் விவரங்கள் உள்பட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு விவரங்கள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என ஆய்வு செய்தார்.

இதில் தாசில்தார் நக்கீரன், துணை தாசில்தார் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித்தொகை கோரி 20 மனுக்களும், வீட்டுமனை பட்டா கோரி 3 மனுக்களும், ஆதரவற்ற விதவை சான்று கோரி ஒரு மனுவும், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 2 என மொத்தம் 26 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த மனுக்களை திருவாரூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் பவானி பெற்றார்.

இதில் மன்னார்குடியை அடுத்த சவளக்காரன் ஊராட்சியை சேர்ந்த கனகராஜ் என்ற பயனாளிக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையை கலால் உதவி ஆணையர் பவானி வழங்கினார். மேலும் அதிகளவில் முதியோர் தொகைக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அதனை பரிசீலனை செய்து விரைவில் தகுதி உள்ளோருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் தாசில்தார் லெட்சுமி பிரபா, தனி தாசில்தார் அன்பழகன், தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில், துணை தாசில்தார்கள் ஜெயபாஸ்கர், சரவணகுமார், தேர்தல் துணை தாசில்தார் இளங்கோவன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் மலர்கொடி முன்னிலை வகித்தார். இதில் மன்னார்குடி உதவி கலெக்டரும், வருவாய் தீர்வாய அலுவலருமான புண்ணியக்கோட்டி தலைமை தாங்கினார். ஆய்குடி, அத்திச்சோழமங்கலம், நட்டுவாக்குடி, காவனூர், மேலதிருமதிகுன்னம், நாலில்ஒன்று, விடயபுரம், முசிரியம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார். இதில் ஒரு நபருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் தனி தாசில்தார் மகேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கூத்தாநல்லூர் வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை தலைமை தாங்கினார். அன்னுக்குடி, உத்தமதானபுரம், சாலபோகம், மூலாழ்வாஞ்சேரி, ஆவிச்சாங்குடி, நல்லூர், ரெங்கநாதபுரம், கிளியூர், இனாம்கிளியூர், கோவிந்தக்குடி ஆகிய கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இதில் தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com