300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது; சேத்தூரில் கண்மாயில் உடைப்பு

சேத்தூரில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய தண்ணீரால், சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமானது.
300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது; சேத்தூரில் கண்மாயில் உடைப்பு
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள பிறாகுடி கண்மாயை சுற்றி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக பிறாகுடி ஆற்றின் மூலம் கடந்த சில நாட்களாக கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாதி கண்மாய் நிரம்பி உள்ள நிலையில் நேற்று அதிகாலையில் கண்மாய் மடைக்கு அருகே புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்ததால் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப் பட்டிருந்த 1 மாத நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு வந்து விவசாயிகளின் டிராக்டர் மற்றும் உபகரணங்களை கொண்டு மணல் மூடைகள் தயார் செய்து விவசாயிகளின் உதவியோடு உடைப்பை சரி செய்ய முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு பக்கம் அடைக்கும் போது மடையின் மறு புறம் உள்ள கரை பலமிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த உடைப்பு மேலும் அதிகமடைந்து கூடுதலாக தண்ணீர் வெளியேறியது. இதன் காரணமாக பயிர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டன. எனினும் சுமார் 6 மணி நேரம் போராடி உடைப்பு அடைக்கப்பட்டது.

தற்போது வரை ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம்வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ளனர். அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளது. மேலும் கண்மாயில் உள்ள களி மண்ணும் நிலத்தை நிரப்பி விட்டது. இதனால் தண்ணீர் வடிந்தாலும் உடனடியாக பயிர் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு சுவர் சரியான முறையில் கட்டாமல் விட்டதாகவும், கட்டப்பட்ட சுவர் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சோதனை செய்யாமல் அலட்சியம் காட்டியதாலேயே உடைப்பு ஏற்பட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என பிறாகுடி கண்மாய் பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com