தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 338 அரசு பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் - சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 338 அரசு பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் அடைந்துள்ளன. இதனை சீரமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 338 அரசு பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் - சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை
Published on

தஞ்சாவூர்,

கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன. இந்த மாவட்டங்களில் ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. மாடி வீடுகளும் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. நெல், மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

இந்த புயலினால் சாலை ஓரங்களில் இருந்த மரங்களும் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன. ஏராளமான மின்கம்பங்கள் முறிந்தன. இன்னும் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் 1,054 பள்ளிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கஜா புயலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ஒரு வாரகாலம் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

இந்த காலக்கட்டத்தில் பள்ளிக்கட்டிடத்தின் மீது விழுந்த மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் லேசாக சேதம் அடைந்த பகுதிகளும் உடனடியாக சீர்செய்யப்பட்டன. இதையடுத்து அந்த பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின. மேலும் தஞ்சை மாவட்டத்தில் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆன 338 அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

இதில் 178 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களும், 50 ஊராட்சி அலுவலக கட்டிடங்களும், 110 அங்கன்வாடி கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் இதில் பல கட்டிடங்கள் பகுதியாகவும், சிலகட்டிடங்கள் முழுமையாகவும் சீரமைக்க வேண்டி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான பரிந்துரைகள் அரசிடம் இருந்து வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com