பச்சிளம் குழந்தையை காப்பாற்ற 34 கி.மீ. தூரத்தை 27 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

பச்சிளம் குழந்தையை காப்பாற்ற 34 கி.மீ. தூரத்தை 27 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் கடந்தார். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.
பச்சிளம் குழந்தையை காப்பாற்ற 34 கி.மீ. தூரத்தை 27 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்
Published on

அன்னூர்,

பச்சிளம் குழந்தையை காப்பாற்ற 34 கி.மீ. தூரத்தை 27 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் கடந்தார். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜகான். இவருடைய மனைவி மம்முனி. இவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூரில் தங்கி இருந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மம்முனிக்கு கடந்த 7-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது கணவர் நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எடைகுறைவாக இருந்ததால், டாக்டர்கள் குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குழந்தைக்கு சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வயிறு வீங்கியது. இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை பெற்றோர் அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் வர சற்று தாமதம் ஆகும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. குழந்தையை தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்லவும் பெற்றோரிடம் பணம் இல்லை. இதனால் பெற்றோர் தவித்தனர்.

இதனை கண்ட தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் சிரஞ்சீவி என்பவர் அவர்களிடம் சென்று விசாரித்தார். அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை கூறினர். உடனடியாக பணம் எதுவும் வேண்டாம். குழந்தையை நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் வாருங்கள் என்று மனிதாபிமானத்துடன் கூறினார்.

பின்னர் குழந்தையையும், பெற்றோரையும் ஏற்றிக்கொண்டு மதியம் 12.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 1.12 மணிக்கு வந்தடைந்தார். அன்னூரில் இருந்து கோவை அரசு ஆஸ்பத்திரி 34 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு வர சராசரியாக 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் 27 நிமிடங்களில் வந்தடைந்தார். குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் டிரைவர் மேற்கொண்ட இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையில் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து போனது. இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

மேலும் குழந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com