35 உள்ளாட்சி அமைப்புகளில் இழுபறி காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

நகர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 35 உள்ளாட்சி அமைப்புகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
35 உள்ளாட்சி அமைப்புகளில் இழுபறி காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 2,632 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 9 ஆயிரத்து 121 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மூன்று மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. அந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 35 வார்டுகளில் 20 வார்டுகளில் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. காங்கிரஸ் 7 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

மைசூரு மற்றும் துமகூரு ஆகிய 2 மாநகராட்சியில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. 65 வார்டுகளை கொண்ட மைசூரு மாநகராட்சியில் பா.ஜனதா 22 வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 19 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 18 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு வார்டிலும், 5 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

35 வார்டுகளை கொண்ட துமகூரு மாநகராட்சியில் 12 வார்டுகளில் பா.ஜனதாவும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா 10 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த மைசூரு மற்றும் துமகூரு மாநகராட்சிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. மொத்தம் மூன்று மாநகராட்சிகளில் 135 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 54 வார்டுகளிலும், காங்கிரஸ் 36 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 30 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 14 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

29 நகரசபைகளில் உள்ள 926 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா பா.ஜனதா 370 வார்டுகளிலும், காங்கிரஸ் 294 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 106 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் 10 வார்டுகளிலும், சுயேச்சைகள் 123 வார்டுகளிலும், பிற கட்சிகள் 23 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

20 பட்டண பஞ்சாயத்துக்களில் உள்ள 355 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 130 வார்டுகளிலும், காங்கிரஸ் 138 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 29 வார்டுகளிலும், சுயேச்சைகள் 57 வார்டுகளிலும், மற்றவை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.

அதே போல் 53 புரசபைகளில் உள்ள 1,246 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 375 வார்டுகளிலும், காங்கிரஸ் 514 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 210 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 135 வார்டுகளிலும், பிற கட்சிகள் 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

ஆகமொத்தம் 2,662 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 929 வார்டுகளிலும், காங்கிரஸ் 982 வார்டுகளிலும், ஜனதா தளம்(எஸ்) 375 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் 13 வார்டுகளிலும், சுயேச்சைகள் 329 வார்டுகளிலும், பிற கட்சிகள் 34 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதில் 30 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலை பொறுத்த வரையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் ஏறத்தாழ சமஅளவில் வெற்றி பெற்றுள்ளளன.

மொத்தமுள்ள 105 நகர உள்ளாட்சி தேர்தல்களில் எந்தந்த கட்சிகள் எத்தனை இடங்கள் கைப்பற்றியுள்ளன என்ற விவரம் பின்வருமாறு:-

மாநகராட்சிகள் - 3

1. மைசூரு - தொங்குநிலை

2. சிவமொக்கா - பா.ஜனதா

3. துமகூரு - தொங்குநிலை

நகரசபைகள் - 29

காங்கிரஸ் - 5

பா.ஜனதா - 9

ஜனதா தளம்(எஸ்) - 2

இழுபறி - 13

புரசபைகள் - 53

காங்கிரஸ் - 19

பா.ஜனதா - 10

ஜனதா தளம்(எஸ்) - 8

இழுபறி - 16

பட்டண

பஞ்சாயத்துகள் - 20

காங்கிரஸ் - 7

பா.ஜனதா - 7

ஜனதா தளம்(எஸ்) - 2

இழுபறி - 4

35 உள்ளாட்சி

105 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 31-லும், பா.ஜனதா 27-லும், ஜனதாதளம் (எஸ்) 12-லும் வெற்றி வாகை சூடியுள்ளன. 35 உள்ளாட்சி அமைப்புகளில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதில் சில உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்ற முடிவு செய்துள்ளது. சில உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜனதா கட்சி சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து கைப்பற்ற முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜனதா தளம்(எஸ்) கட்சி தனது பலத்திற்கு ஏற்ப வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தங்களுக்கு திருப்தியை தந்துள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் பா.ஜனதா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருப்பதை அக்கட்சி தனக்கு கிடைத்த பெரிய வெற்றியாகவே கருதுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com