3-வது நாளாக வேலைநிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,200 பேர் கைது

கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,200 பேர் கைது செய்யப்பட்டனர்.
3-வது நாளாக வேலைநிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,200 பேர் கைது
Published on

கோவை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கோவை கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் உள்பட 9 இடங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன் காலை 9 மணி முதல் திரள தொடங்கினர்.

தொடர்ந்து அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து காலை 10.30 மணியளவில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கலெக் டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷம் போட்டனர். இதில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத்குமார், ஸ்ரீதர், அருணாசலம், இன்னாசிமுத்து, மைக் கேல்ராஜ், சாமிநாதன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டு 9 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம், ரெயில்நிலையம், கோர்ட்டு, அரசு ஆஸ்பத்திரி, அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் நேற்று அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கின. ஒருசில ஆசிரியர்கள் மட்டுமே நேற்று பள்ளிக்கு சென்றனர். அவர் களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகளில் ஆசிரியர்கள் வராமல் போனதால் மாணவர்களே பாடம் நடத்தினர். ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. இதே நிலை அரசு அலுவலகங்களிலும் காண முடிந்தது. சொற்ப அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் அரசு அலுவலகங்கள் இயங்கின. பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் 252 பேராசிரியர்களில், 237 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அங்கும் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகி சம்பத்குமார் கூறியதாவது:-

எங்களின் நியாயமான கோரிக்கைகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கி உள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தலைமை செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார், அதில் நோ ஒர்க், நோ பே என்று தெரிவித்து உள்ளார். போராட்ட நேரங்களில் இப்படி அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான்.

இது போன்ற மிரட்டலுக்கு ஜாக்டோ-ஜியோவில் உள்ளவர்கள் பயப்படாமல் 80 சதவீதம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் இருந்தே, புரிந்து கொள்ள வேண்டும். எனவே எங்கள் போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை முழு வீச்சில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நாங்கள் ஏற்கெனவே நடத்தி முடித்துவிட்டோம். தேவைப்பட்டால் கூடுதல் வகுப்புகள் நடத்தவும் தயாராக இருக்கிறோம். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. அதையும் ஏற்க தயாராக உள்ளோம். ஆனால் எங்கள் குறிக்கோள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதே.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் முழுவதும் இருந்து வந்து கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2 ஆயிரத்து 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேன் மற்றும் தனியார் பஸ் மூலம் பல்வேறு திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் இந்த போ ராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதேபோல் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சுப்பணியாளர்கள் 40 பெண்கள் உள்பட 100 பேர் கலந்து கொண்டு அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் பணிக்கு செல்லவில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவில் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com