மாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி சாதனை ‘காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை’ என பேட்டி

நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவி மாநில அளவில் 3-வது இடம் பெற்று சாதனை படைத்தார். அவர் ‘காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை’ என கூறினார்.
மாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி சாதனை ‘காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை’ என பேட்டி
Published on

மணவாளக்குறிச்சி,

குளச்சல் அருகே மண்டைக்காடு, கூட்டுமங்கலத்தை சேர்ந்தவர் நாராயண பிள்ளை, வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நீலகண்டேஸ்வரி. இவர்களது 2-வது மகள் தர்ஷனா. இவர் தற்போது நடந்த நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 157 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம்பெற்றார்.

மாணவி தர்ஷனா மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் போது கார் மோதி வலது கால் முறிந்தது. அதன்பின்பு செயற்கை கால் பொருத்தி பள்ளி படிப்பை முடித்தார். அத்துடன் நீட் தேர்விலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து மாணவி தர்ஷனா கூறியதாவது:-

நான் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை வீட்டின் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்தேன். 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன்.கடந்த 2015-ம் ஆண்டு 7- ம் வகுப்பு படிக்கும் போது இறுதி தேர்வு சமயத்தில் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சிற்கு காத்து நின்றேன். அப்போது கார் மோதி வலது கால் முறிந்தது. பின்னர், திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் 27 நாட்கள் சிகிச்சை பெற்று செயற்கை கால் பொருத்தினேன்.

சிறு வயது முதல் எனக்கு மருத்துவம் படிக்க விருப்பம். விபத்தில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. மன உறுதியுடன் படித்தேன். கடந்த ஆண்டு 11 மற்றும் 12- ம் வகுப்புகளில் பாடம் மாறியது. புதிய பாடத்திட்டம் நீட் தேர்வுக்கு ஏற்ற மாதிரி இருந்தது. மாநில மொழி கல்வியை நன்றாக படித்தாலே நீட் தேர்வில் வெற்றி பெறலாம். நீட் எழுத விண்ணப்பம் செய்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்றேன்.

அங்கு மருத்துவர்கள் நீட் சம்பந்தமான வினா-விடை அடங்கிய 3 புத்தகங்கள் வழங்கினர். அந்த புத்தகம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அந்த புத்தகங்களை நன்றாக படித்துவிட்டு நீட் தேர்வு எழுதினேன். பயிற்சி மையம் எதிலும் நான் சென்று படிக்க செல்லவில்லை. தேர்வு முடிவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் 3-வது இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கலந்தாய்வில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி தர்ஷனாவுக்கு சொப்பனா என்ற ஒரு அக்காள் உண்டு. அவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

சாதனை படைத்த மாணவியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அவரது வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து கூறினார். அப்போது பா.ஜனதா துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com