

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகதீசன் சாலை விபத்தில் சிக்கினார். இதற்காக இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். விபத்தில் படுகாயம் அடைந்ததால் ஏற்பட்ட ஊனம் குறித்து சான்று கேட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் விண்ணப்பம் செய்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் உள்ள நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் தங்கவைக்கப்பட்டார். அதையடுத்து, ஊனச்சான்று பெறுபவர்களுக்கு என்று தனி வார்டு உருவாக்கவும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜெகதீசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஊனச்சான்று பெற வருவோருக்காக தனி வார்டை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊனச்சான்று கோரி வருபவர்களுக்காக, 4 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றையும் ஒதுக்க வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்துவைத்தார்.