4 போலி டாக்டர்கள் கைது

நத்தம் பகுதியில் 4 போலி டாக்டர்களை கைது செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
4 போலி டாக்டர்கள் கைது
Published on

திண்டுக்கல் :

அதிரடி ஆய்வு

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்துக்கு தமிழகத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வாறு தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள சில கிராமங்களில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ள பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுரேஷ் உத்தரவின் பேரில், நத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தங்கத்துரை தலைமையில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சித்த மருத்துவர் இந்திராணி மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் நத்தம் பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

போலி டாக்டர்கள்

அப்போது, நத்தம் அருகே சிறுகுடியை சேர்ந்த குமார் (வயது 42), கோட்டையூரை சேர்ந்த மதினா (38), நத்தத்தை சேர்ந்த முருகேசன் (65), சாந்தி (50) ஆகியோர் தங்களது மருத்துவ கிளினிக்கில் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்கள் 4 பேரும் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் எதுவுமின்றி போலி டாக்டர்களாக மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குமார் உள்பட 4 பேர் மீதும் நத்தம் போலீஸ் நிலையத்தில் மருத்துவ அலுவலர் தங்கத்துரை புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது கிளினிக்கில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com